தேயிலை விவசாயிகள் மேம்பாட்டுக்கு ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு


தேயிலை விவசாயிகள் மேம்பாட்டுக்கு ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேயிலை விவசாயிகள் மேம்பாட்டுக்கு ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று தும்மனட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

தேயிலை விவசாயிகள் மேம்பாட்டுக்கு ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று தும்மனட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

கிராம சபை கூட்டம்

நீலகிரி மாவட்டம் தும்மனட்டி ஊராட்சி சமுதாய கூடத்தில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ ராகி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. கூடலூர் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவு திட்டம், விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிற ஜூலை மாதம் முதல் ஊட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. தும்மனட்டி ஊராட்சியில் உள்ள 7 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ.2½ கோடி ஒதுக்கீடு

சிறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் 5 வருடங்களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் தும்மனட்டி ஊராட்சியில் 25 பணிகள் எடுக்கப்பட்டதில், 12 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 13 பணிகள் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

மகளிர் திட்டம் சார்பில், தும்மனட்டியில் உள்ள 64 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடந்த ஆண்டு ரூ.54 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதிகமாக கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக வருவாய்த்துறை சார்பில், 3 பயனாளிகளுக்கு உதவித்தொகை தலா ரூ.1,000 பெறுவதற்கான ஆணை, 8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ2.60 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்க தனி நபர் கடனுதவி, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.10,000 மதிப்பில் மருந்து பெட்டகங்களை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கருப்புச்சாமி, ஊட்டி ஆர்.டி.ஒ. துரைசாமி, தும்மனட்டி ஊராட்சி தலைவர் சுமதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story