சுயதொழில் தொடங்க 660 முன்னாள் கைதிகளுக்கு ரூ.3¼ கோடி நிதி உதவி; முதல்-அமைச்சர் வழங்கினார்
660 முன்னாள் கைதிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ.3¼ கோடி நிதி உதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பொது மன்னிப்பில் சிறையில் இருந்து முன்விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் கைதிகளுக்கு தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் சுயதொழில் தொடங்க ரூ.3 கோடியே 30 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கும் அடையாளமாக 10 முன்னாள் கைதிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.
இந்திய சிறைக்குழுவின் பரிந்துரைக்கிணங்க, தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம், அலுவல் சாரா நிறுவனமாக, 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிறையில் இருந்து விடுதலை பெற்று வருபவர்களின் நல்வாழ்விற்காக, அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுத்து, அவர்கள் சமூகத்தில் நேர்மையாக வாழ்வதற்கு வழிவகை செய்யும் வகையில், சுயதொழில் தொடங்க தேவையான நிதி உதவிகளை வழங்குவதே இச்சங்கத்தின் குறிக்கோளாகும்.
ரூ.3 கோடியே 30 லட்சம் காசோலைகள்
சிறை மீண்டோர் நலச்சங்கம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலமாக அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மன்னிப்பில் முன்விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் கைதிகளுக்கு, அவர்கள் கறவை மாடுகள் வாங்குதல், தையல் தொழில், தேநீர் கடை, சலவைத் தொழில், உணவகம் அமைத்தல் போன்ற சுயதொழில்கள் தொடங்க ரூ.3 கோடியே 30 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கும் அடையாளமாக 10 முன்னாள் கைதிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதன் மூலம் விடுதலை செய்யப்பட்ட 660 கைதிகள் சுயதொழில் செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சீரிய மறுவாழ்வு பெற்று மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் சமூகத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்க வழிவகுக்கும்.
பங்கேற்றவர்கள்
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சேகர்பாபு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, சென்னை சரக சிறைத்துறை துணைத்தலைவர் ஆ.முருகேசன், தலைமை நன்னடத்தை கண்காணிப்பாளர் பி.சிவபிரசாத், தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்க கவுரவ பொருளாளர் ஞானேஸ்வரன் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.