பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்
கரும்பு பயிர்களில் நோய் தாக்கம் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வேல்முருகன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிதம்பரம்:
கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்குழு கூட்டம் சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மு.ஆளவந்தார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சு.சேரலாதன் வரவேற்றார். நகர தலைவர் அன்பகம் சுகுமார், நிர்வாகிகள் முனியாண்டி, சத்தியமூர்த்தி, ராமநாதன், ஸ்டிக்கர் ராஜா, செல்வநாயகம், கலை அழகு, வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை நிலைய செயலாளர் கனல் கண்ணன், மாநில இளைஞரணி செயலாளர் முருகன், நிர்வாகிகள் தில்லை, சங்கர், தாடி முருகன் உள்பட நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
மக்கள் மீது அடக்குமுறை
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தரமில்லாத தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஆண்டிற்கு 2 முறை சுங்க கட்டணம் உயர்த்துவதும், மக்களின் மீது செலுத்தப்படும் அடக்கு முறையாகும். அதோடு மட்டுமல்லாமல் டெண்டர் விதிகளின்படி தமிழகத்தில் எந்த சுங்கச்சாவடிகளும் இயங்கவில்லை.
சட்டவிரோதமாக நடைபெறும் சுங்கச்சாவடிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். என்.எல்.சி. நிர்வாகம் விவசாயிகளிடம் இருந்த நிலத்தை தனதாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு இதுவரை வேலை வழங்கவில்லை.
10-ந் தேதி போராட்டம்
உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் ஆணையிட்டும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசையும் ஒன்றிய மோடி அரசையும் வன்மையாக கண்டிக்கின்றோம். அடுத்த மாதம்(அக்டோபர்) 10-ந் தேதி கடலூர் மாவட்ட சிப்காட் தொழிற்சாலையை கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் பிரதான பயிர்களில் ஒன்று கரும்பு விவசாயம். கடந்த 2 வருடங்களாக கரும்பு விவசாயம் கேள்விக்குறியாக உள்ளது, 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் கரும்பில் மஞ்சள் அழுகல் நோயும், வேர்களில் நோயும் தாக்கியுள்ளது. கரும்பு உற்பத்தி செலவு கூட ஈடு செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளார்கள். கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் நகர செயலாளர் ஆர்.கே குமரன் நன்றி கூறினார்.