ரூ.500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்; அண்ணாமலைக்கு தி.மு.க. நோட்டீஸ்


ரூ.500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்; அண்ணாமலைக்கு தி.மு.க. நோட்டீஸ்
x

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு தி.மு.க. சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 48 மணி நேரத்துக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

சென்னை,

தி.மு.க.வை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் சொத்துபட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தி.மு.க. நோட்டீஸ்

அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை 15 நாட்களுக்குள் அவர் எங்களிடம் வழங்கவில்லை என்றால், அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.

இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் எம்.பி. அண்ணாமலைக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் முகவரிக்கு அனுப்பப்பட்டு உள்ள அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மு.க.ஸ்டாலினுக்கு அங்கீகாரம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் 2021-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் மே மாதம் ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் அயராது உழைத்து, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, தற்போது 'திராவிட மாடல்' ஆட்சியில் சிறந்து விளங்கி நாட்டின் சிறந்த முதல்-அமைச்சர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் நீங்களும், உங்கள் கட்சியும் முத்திரை பதிக்க முடியாத நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கியத் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் நற்பெயரை களங்கப்படுத்தவும், அவதூறு செய்யவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறீர்கள்.

பொய்யான குற்றச்சாட்டு

'தி.மு.க. பைல்ஸ்' என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் நீங்கள் தி.மு.க. மீது பல தவறான, ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தீர்கள். தி.மு.க.வின் சில சொத்துகளின் மதிப்பை உயர்த்தி, தொடர்பில்லாத சொத்துகள் உள்ளிட்டவற்றின் மூலம் தி.மு.க.வுக்கு மொத்தம் ரூ.1,408.94 கோடி சொத்து இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.

வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய அதிகாரிகளிடம் தி.மு.க.வின் சொத்துகள் மற்றும் கடன்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. சொத்து விவரங்களை மறைத்திருந்தால் அத்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். தி.மு.க.வினருக்கு சொந்தமான பள்ளிகளின் மதிப்பு ரூ.3,474.18 கோடி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மதிப்பு ரூ.34,184.71 கோடி என்பது பொய்யானது.

ஆடுகள், வாட்ச் சொத்தாக மாறுமா?

ஒருவர் தி.மு.க.வின் உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும், அவருக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது. ஒரு தனிநபரின் சொத்துகளுக்கும் அரசியல் கட்சியின் சொத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எங்கள் கட்சிக்காரர் கூறுகிறார்.

இந்த கொள்கையை விளக்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறார். உங்களிடம் 3-4 ஆடுகள் இருப் பதாக அடிக்கடி கூறுவதால், இந்த ஆடுகள் பா.ஜ.க.வின் சொத்தாக மாறுமா? அல்லது உங்கள் ரபேல் கைக்கடிகாரம் பா.ஜ.க.வின் சொத்தாக மாறுமா?.

உண்மைக்கு புறம்பானது

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022-ம் ஆண்டு வரை அரசியல் கட்சிகளுக்கு நிதியாக வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மொத்த மதிப்பு ரூ.9,208 கோடி என ஊடகங்கள் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதில் ரூ.5,270 கோடி பா.ஜ.க.வுக்கு மட்டுமே சென்றுள்ளது. இவையும் முறைகேடான வழியில் பெறப்பட்டவை என்று கூற முடியுமா?.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் பணமோசடியில் ஈடுபடவே துபாய்க்கு சென்றார் எனவும் முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. நீங்கள் அதில் கூறியது போல நோபல் ஸ்டீல் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் எந்தப் பொறுப்பையும் எக்காலத்திலும் வகித்ததில்லை.

உங்கள் காணொலியில் உதயநிதி ஸ்டாலின் 'நோபல் புரோமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடேட்' என்னும் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார் என கூறப்பட்டுள்ளது. அதில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டு, அதில் தனக்கிருந்த பங்குகளையும் 2010-ம் ஆண்டே அவர் விற்று விட்டார்.

துபாயில் ஒப்பந்தம் கையெழுத்தான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துக்கும் 'நோபல் புரோமோட்டர்ஸ்' நிறுவனத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நோபல் என்ற பொதுவான ஒரு பதத்தை மட்டும் வைத்துக்கொண்டு கற்பனையான, ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை எங்கள் கட்சித் தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும்நோக்கோடு முன்வைத்துள்ளீர்கள்.

ஊழலில் ஈடுபட்டது யார்?

மேலும், 2006-2011 ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரெயில் முதற்கட்டப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை ஒரு நிறுவனத்துக்கு அளிப்பதற்காக ரூ.200 கோடி பெற்றார் எனவும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இந்த திட்டத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வும் தொடர்ந்தது என்பதுடன், அன்றைய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் தொடங்கி வைத்தார். மேலும், இதன் விரிவாக்கத்தையும் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.

தற்போது 2-ம் கட்டப் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு அதே நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், உங்கள் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வும், பிரதமர் நரேந்திர மோடியும் ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்று நீங்கள் கூறுகிறீர்களா?.

கருத்துகள் ஆதாரமற்றவை

அந்த வீடியோவில், மக்களுடைய பணத்தை ஒப்பற்ற அளவில் தி.மு.க. கொள்ளையடித்துள்ளது என்றும், அது ராபர்ட் கிளைவைவிட அதிகமாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தகைய கருத்துக்கள் ஆதாரமற்றவை என்று எங்கள் கட்சிக்காரர் (ஆர்.எஸ்.பாரதி) கூறுகிறார்.

தி.மு.க.வின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது, தி.மு.க.வின் 2 கோடி உறுப்பினர்களில் ஒவ்வொருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு சமம். இதனால் அமைப்பு செயலாளர் என்ற முறையில், எங்கள் கட்சிக்காரர் உங்கள் மீது அவதூறுக்காக தகுந்த வழக்கு தொடர உரிமை உண்டு.

ரூ.500 கோடி இழப்பீடு நஷ்டஈடு

எனவே, தி.மு.க. மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக நான் கூறிக்கொள்வது என்னவென்றால், உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் வீடியோவை நீக்க வேண்டும்.

நஷ்டஈடாக ரூ.500 கோடி எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றை செய்ய தவறினால், உங்களுக்கு எதிராக பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார்.

இவ்வாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story