ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம்
ேவலூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அணிவகுப்பு ஊர்வலம்
வேலூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அணிவகுப்பு ஊர்வலம் வேலூர் சலவன்பேட்டையில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்துக்கு வேலூர் மாவட்ட தலைவர் சசிக்குமார் தலைமை தாங்கினார். வேலூர் கோட்ட தலைவர் ஜெகதீசன், அமைப்பாளர் கணேசன், இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ், தொழிலதிபர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆர்.எஸ்.எஸ். தென்மாநில சேவா அமைப்பு செயலாளர் பத்மகுமார் கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து வழி நடத்தி சென்றார்.
சலவன்பேட்டை ஆணைகுளத்தம்மன் கோவில் அருகே இருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஊர்வலம் வேலப்பாடி ராமர்பஜனை கோவில் தெரு, லட்சுமிபுரம், சக்கரமடத்தெரு, ஆரணிரோடு வழியாக வந்து அண்ணா கலையரங்கம் அருகே நிறைவடைந்தது.
இதில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் சீருடை அணிந்தபடி கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதையொட்டி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர் உள்பட 420 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊர்வலத்தை தொடர்ந்து அண்ணா கலையரங்கம் அருகே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.