ரப்பர் பால் வெட்டும் தொழில் தொடங்கியது
குமரி மாவட்டத்தில் இலையுதிர் காலத்திற்கு பின்பு ரப்பர் பால் வெட்டும் தொழில் மீண்டும் தொடங்கியது. இதனால் தொழிலாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் இலையுதிர் காலத்திற்கு பின்பு ரப்பர் பால் வெட்டும் தொழில் மீண்டும் தொடங்கியது. இதனால் தொழிலாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இலையுதிர் காலம்
குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ரப்பர் மரங்களில் இலையுதிர்வு காலம் ஏற்படும். அப்போது பால் வெட்டும் தொழில் நிறுத்தப்படும். இதையடுத்து புதிய இலைகள் செழிப்பாக துளிர்த்த பின்னர் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பால் வெட்டும் தொழில் ெதாடங்கும்.
குறிப்பாக மழை பெய்வதை பொறுத்து பெரும்பாலான சிறு தோட்டங்களில் ஈஸ்டர் பண்டிகைக்குப் பின்னர் பால் வெட்டும் ெதாழில் தொடங்கப்படும். மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகம் மற்றும் பெரும் தனியார் ரப்பர் தோட்டங்களில் கடந்த மாதமே பால் வெட்டும் தொழில் ெதாடங்கப்பட்டது.
இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னர் பெரும்பாலான சிறு ரப்பர் தோட்டங்களில் நேற்று பால் வெட்டுதல் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் உற்சாகமாக தோட்டங்களுக்குச் சென்று வேலை செய்தனர்.
ரப்பர் விலை சிறிது உயர்வு
ரப்பர் பால் வெட்டுதல் நிறுத்தப்படும் காலங்களில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வருவாய் இல்லாத நிலை ஏற்படும். தற்போது ரப்பர் பால் வெட்டுதல் தொடங்கியுள்ளதால் ரப்பர் தோட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ரப்பர் ஷீட் உற்பத்தி குறைவு காரணமாக விலை சிறிது உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி (வியாபாரிகள் விலை) ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோ ரூ.145 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோ ரூ.143 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோ ரூ.129 ஆகவும் இருந்தது. ஒட்டுப்பால் விலை (80 சதவிகிதம்) கிலோ ரூ.97 ஆக இருந்தது.