குமரியில் ரப்பர் விலை உயர்வு
குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை சிறிது உயர்ந்து கிேலா ரூ.119.50க்கு விற்பனையானது.
குலசேகரம்:
குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை சிறிது உயர்ந்து கிேலா ரூ.119.50க்கு விற்பனையானது.
விலை வீழ்ச்சி
குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ரப்பர் விலை கடந்த ஆண்டு இறுதியில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி வியாபாரி விலையாக ஆர்.எஸ்.எஸ்.4 தர ரப்பரின் விலை கிலோ ரூ.130.50 ஆகவும், ஆர்.எஸ்.எஸ்.5 தர ரப்பரின் விலை கிலோ ரூ.126.50 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோ ரூ.115 ஆகவும் குறைந்து காணப்பட்டது.
இந்தநிலையில் இந்த விலை கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. நேற்று கோட்டயம் சந்தையில் வியாபாரி விலையாக ஆர்.எஸ்.எஸ்.4 கிலோ ரூ.132.50ஆகவும், ஆர்.எஸ்.எஸ்.5 கிலோ ரூ.130 ஆகவும், ஐ.எஸ்.எஸ். கிலோ ரூ.119.50 ஆகவும் இருந்தது. இதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
ரப்பர் வாரிய விலையாக ஆர்.எஸ்.எஸ்.4 கிலோ ரூ.137.50 ஆகவும், ஆர்.எஸ்.எஸ்.5 கிலோ ரூ.135ஆகவும், ஐ.எஸ்.என்.ஆர்.20 கிலோ ரூ.120 ஆகவும் இருந்தது.
உற்பத்தி குறைவு
இதுகுறித்து குலசேகரத்தை சேர்ந்த ரப்பர் விவசாயி ஒருவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு இறுதியில் ரப்பர் விலை மிகவும் சரிவடைந்தது. இந்தநிலையில் தற்போது சற்று அதிகரித்துள்ளது. அதே வேளையில் ரப்பர் மரங்களில் குளிர்கால இலையுதிர்வு தொடங்கியுள்ளதால் பால் உற்பத்தி குறைந்து வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை குறைந்த பட்சம் ரூ.160 ஆக உயர்ந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு பலன் அளிப்பதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.