வயதான தம்பதிக்கு புதிய வீடு கட்டிக் கொடுத்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.
ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு வயதான தம்பதிக்கு புதிய வீட்டை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கட்டிக் கொடுத்தார்.
இட்டமொழி:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில் ஒவ்வொரு வட்டார பகுதிகளுக்கும் நேரடியாக சென்று நீர்-மோர் பந்தல் அமைத்து வழங்கி, கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
களக்காடு அருகே உள்ள பத்மநேரி வி.கே.நகரைச் சேர்ந்த வயதான வேலு-இசக்கியம்மாள் தம்பதியினர் மண் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தனர். அந்த வீடு மழையில் இடிந்து விழுந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. புதிதாக கட்டிக் கொடுத்தார். நேற்று ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் நடத்தி சாவியை தம்பதியினரிடம் ஒப்படைத்தார். வீட்டு சாவியை பெற்றுக்கொண்ட அந்த தம்பதியினர், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்தனர். அப்பகுதி மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.