தஞ்சை மாவட்டத்தில் ரூ.10½ கோடிக்கு மதுவிற்பனை
தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.10½ கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.10½ கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.
மது விற்பனை
தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்து வருகிறது. அதுவும் பண்டிகை காலங்களில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. பண்டிகை என்றாலே அதில் மதுவும் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. குடிமகன்கள் பண்டிகையை வழக்கத்தை விட அதிகமாக மது அருந்தி கொண்டாடுகிறார்கள். பொங்கல் பண்டிகை நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது.தஞ்சை மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுகடைகள் உள்ளன. மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கடைகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் தினமும் சராசரியாக ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை மது விற்பனை நடைபெற்று வருகிறது.
ரூ.10½ கோடிக்கு விற்பனை
பண்டிகை காலங்களில் மட்டும் அதுவும் குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாட்களில் இதன் விற்பனை 2 மடங்கு வரை அதிகரித்து காணப்படும். நேற்றுமுன்தினம் பொங்கல் பண்டிகை தினத்தன்று டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது வகைகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். பொங்கல் பண்டிகை தினத்தன்று மட்டும் தஞ்சை மாவட்டத்தில் ரூ.10½ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.