16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8¾ லட்சம் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் கார்மேகம் வழங்கினார்


16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8¾ லட்சம் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
x

சேலத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

சேலம்

465 மனுக்கள்

சேலத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 465 மனுக்கள் பெறப்பட்டன.

அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலெக்டர் கார்மேகம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி மனுக்களை வழங்கும் வகையில் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் அவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 12 மனுக்களை கலெக்டர் கார்மேகம் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நலத்திட்ட உதவிகள்

மேலும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

தொடர்ந்து கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜசேகர் என்பவருக்கு ஹெல்மெட் விற்பனை அங்காடியை மேம்படுத்துவதற்காக ரூ.95 ஆயிரம் கடன் உததவியும், குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரகாஷ் என்பவருக்கு கறவை மாடுகள் வாங்குவதற்காக ரூ.1 லட்சம் கடன் உதவி என மொத்தம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story