ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்
சிலிண்டர் கொடுக்காமல் அலைக்கழித்த ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சிலிண்டர் கொடுக்காமல் அலைக்கழித்த ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கியாஸ் இணைப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மூவாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. கல்லூரி முதல்வரான இவர், மன்னார்குடியில் உள்ள ஒரு கியாஸ் ஏஜென்சியில் இன்டேன் கியாஸ் இணைப்பு வாடிக்கையாளராக இருந்து வருகிறார். கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிலிண்டர் பதிவு செய்வதற்காக கியாஸ் ஏஜென்சி அலுவலகத்துக்கு சென்றார்.அப்போது உங்களது கியாஸ் இணைப்பை மன்னார்குடியில் வேறு கியாஸ் ஏஜென்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
7 மாதங்கள்
இதைத்தொடர்ந்து மாறுதல் செய்யப்பட்ட கியாஸ் ஏஜென்சிக்கு சென்று அவர் கேட்டுள்ளார். அப்போது அவர்கள், எங்கள் ஏஜென்சிக்கு மாறுதலுக்கான உத்தரவு வரவில்லை. எனவே பழைய கியாஸ் ஏஜென்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.இவ்வாறு மாறி, மாறி இரண்டு கியாஸ் ஏஜென்சிகளும் கந்தசாமியை அலைக்கழித்து உள்ளனர். கந்தசாமி கல்லூரி முதல்வராக இருப்பதால் தனது அலுவல்களுக்கு இடையிலும் தொடர்ந்து 7 மாத காலமாக 2 கியாஸ் ஏஜென்சிகளுக்கும் அலைந்து உள்ளார். ஆனாலும் அவருக்கு சிலிண்டர் வழங்கப்படவில்லை. இதற்கிடையே 7 மாதம் ஆகிவிட்டதால் உங்களது இணைப்பை புதுப்பிக்க திருச்சியில் உள்ள ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு(இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்) செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு
இதைத்தொடர்ந்து கந்தசாமி தகவல் உரிமை சட்டத்தின் மூலம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு ஏஜென்சி மாற்றம் செய்யப்படும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.அதற்கு வாடிக்கையாளருக்கு தெரிவிக்காமல் எக்காரணம் கொண்டும் ஏஜென்சி இணைப்பை மாற்றக்கூடாது என்று பதில் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கந்தசாமி திருவாரூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ரூ.3 லட்சத்து 10 ஆயிரம்
இந்த வழக்கில் சேவை குறைபாடு, மன உளைச்சல், பொருள் நஷ்டம், ஆகியவற்றுக்காக ரூ.2 லட்சமும், உரிய நேரத்தில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யாமல் கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை கஷ்டப்படுத்தியதற்காக தண்டனைக்குரிய சேதங்கள் என எடுத்துக்கொண்டு அதற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் இரண்டு கியாஸ் ஏஜென்சிகளும், ஐ.ஓ.சி.திருச்சி சீனியர் ஏரியா மேலாளர், சென்னை ஐ.ஓ.சி மேலாளர் ஆகியோர் 6 வாரத்துக்குள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.மேலும் இரண்டு கியாஸ் ஏஜென்சிகளில் ஒருவர் தங்கு தடையின்றி வாடிக்கையாளருக்கு மீண்டும் சிலிண்டர் வழங்க வேண்டும். இவ்வாறு நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உத்தரவிட்டார்.