ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.
விடுப்பு எடுத்து போராட்டம்
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் மணிகண்டம், அந்தநல்லூர் உள்ளிட்ட 14 பஞ்சாயத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் கிளார்க் வரையிலான 720 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஓ.எச்.டி. ஆபரேட்டர், தூய்மை பணியாளர், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணிகள் பாதிப்பு
7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த படி அனைத்து ஊராட்சிகளில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு நல வாரிய அட்டை வழங்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட கணினி இயக்குனர்கள் அனைவருக்கும் 2017-ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி அனைவரையும் பணிவரன்முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தால் ஊராட்சி வளர்ச்சித்துறை அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன.
தா.பேட்டை, மண்ணச்சநல்லூர்
தா.பேட்டையில் 28 அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் 35-க்கும் மேற்பட்ட பணியாளர்களில் சுமார் 6 பேர் மட்டுமே நேற்று பணிக்கு வந்திருந்தனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.