ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில், தொடர்ந்து 2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இதனால் வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.

கடலூர்

கடலூர்,

ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்களை நிரப்ப வேண்டும். வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த ஆய்வுகள், விடுமுறை தின இரவு ஆய்வுகள், வாட்ஸ்-அப், காணொலி ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் ஒட்டு மொத்த சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

2-வது நாளாக போராட்டம்

அதன்படி நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒட்டு மொத்த சிறு விடுப்பு போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறு விடுப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிகாமணி தலைமை தாங்கினார். செயலாளர் கொளஞ்சி, பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, விருத்தாசலம், கீரப்பாளையம், மேல்புவனகிரி உள்ளிட்ட 14 ஒன்றியங்களில் உள்ள அலுவலர்கள் வேலைக்கு வராமல் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து பணியை புறக்கணித்தனர். ஒரு சிலர் வழக்கம் போல் பணிக்கு வந்தனர். போராட்டத்தையொட்டி பெரும்பாலான அலுவலகங்கள் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இந்த போராட்டத்தில் மொத்தம் 715 பேர் பங்கேற்றதாக மாவட்ட தலைவர் தெரிவித்தார்.

பணிகள் பாதிப்பு

இருப்பினும் இந்த போராட்டத்தால், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வளர்ச்சி திட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.


Next Story