ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கே.வி.குப்பம், பேரணாம்பட்டில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் உணவு இடைவேளையின் போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகுருநாத்பிரபுவை வருவாய்த் துறை பணியான மகளிர் உரிமைத்தொகை திட்ட பணியில் ஈடுபடுத்தி, இவருடைய பணியை திருப்திகரமாக இல்லை என்று கூறி அவரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டணம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் பகல் 2.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை பணி நேரத்தை கடந்தும் காணொலி காட்சி மூலம், பெண் பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் கூட்டம் நடத்தியதைக் கண்டித்தும், திருவாரூர் திட்ட இயக்குனர் திட்ட செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று அவரை ஒருமையில் தரக்குறைவாக பேசி, குற்ற குறிப்பாணை (மெமோ) வழங்கியதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்ட இணை செயலாளர் ஏ.ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஏ.உமாமகேஸ்வரி, வட்டார துணைத் தலைவர் பி.சங்கீதா, வட்டார பொருளாளர் ப.ஜீவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் வட்டார செயலாளர் வி.பிரகாஷ் நன்றி கூறினார்.
இதேபோல் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் போது மாவட்ட இணைச் செயலாளர் மீனா தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
இதில் அனைத்து நிலை பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.