ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்
சிக்கல்:
ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து நிலை பணி இடங்களையும் நிரப்ப வேண்டும். அனைத்து நிலை பதவி உயர்வுகளையும் உரிய காலத்தில் வழங்கிட வேண்டும். வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றிட, பெருகி வரும் மக்கள் தொகையின் அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீட்டு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 13-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று (புதன்கிழமை) கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இ்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் 71 பேரில் 28 பேர் பணிக்கு வரவில்லை. அலுவலர்கள் வராத காரணத்தினால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் அங்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.