ராமேசுவரம் கோவிலில் எஸ்.ஏ.சந்திரசேகர் தரிசனம்
ராமேசுவரம் கோவிலில் எஸ்.ஏ.சந்திரசேகர் தரிசனம்
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு நேற்று நடிகர் விஜய்யின் தந்தையும், சினிமா டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வந்தார். அக்னி தீர்த்தக்கடலில் நீராடி, கடற்கரையில் திதி தர்ப்பண பூஜை செய்தார். கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடினார். கோவிலின் விசுவநாதர் சன்னதி எதிரே அமர்ந்து, கலசம் வைத்து ருத்ராபிஷேக பூஜை செய்தார். புனித நீரால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சாமி தரிசனத்துக்கு பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேதார்நாத் மற்றும் காசி சென்று வந்துள்ளேன். ராமேசுவரம் வந்து அக்னிதீர்த்த கடலில் நீராடி சாமி தரிசனம் செய்தேன். தீர்த்தக் கிணறுகளில் நீராடினாலே உடலும் மனதும் ஒருவித மகிழ்ச்சியாக உள்ளது. பிளாட்பாரத்தில் கிடந்த நான், இன்று இப்படி இருக்கிறேன் என்றால், அதற்கு கடவுளின் கிருபைதான் காரணம். கடவுள் மீது நாம் அதிக நம்பிக்கை வைத்து வழிபட வேண்டும். ஆதி சிவன் உள்ள இடங்களுக்கெல்லாம் சென்று தரிசனம் செய்தால் அது ஒரு ஆனந்தமாகவே உள்ளது.
நான் தற்போதும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சினிமாவில் ஏதோ ஒன்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் மகன், மனைவி மற்றும் மருமகள், பேரன் என குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரிலும் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்துள்ளேன். சினிமா நல்ல திசையை நோக்கி போய் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.