மீன் குட்டையில் மூழ்கி தாய், மகன் பலி
தளி அருகே மீன் குட்டையில் மூழ்கி வடமாநிலத்ைத சேர்ந்த தாய், மகன் பலியானார்கள்.
தேன்கனிக்கோட்டை
வடமாநில தொழிலாளர்கள்
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் சாகர் (வயது 54). இவருக்கு சொந்தமான எஸ்டேட் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உச்சனப்பள்ளி கிராமத்தில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் அசாம் மாநிலத்தை சேர்ந்த முன்னா குர்மி (வயது 35), அவருடைய மனைவி சுமா (28) ஆகியோர் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு லோகேஷ் (6) என்ற மகன் இருந்தான்.
இந்த நிலையில் நேற்று முன்னா குர்மி வெளியே சென்றிருந்தார். அப்போது லோகேஷ் எஸ்டேட்டில் உள்ள மீன் குட்டையில் வளர்க்கப்பட்டு வரும் மீன்களை தூண்டில் போட்டு பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே எதிர்பாராதவிதமாக மீன் குட்டைக்குள் சிறுவன் தவறி விழுந்து தத்தளித்தான்.
சோகம்
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் சுமா குட்டைக்குள் இறங்கி மகனை காப்பாற்ற முயன்றார். ஆனால் தாய், மகன் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதனை அறிந்த எஸ்டேட் ெதாழிலாளர்கள் தளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தண்ணீரில் மூழ்கி இறந்த தாய், மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் குட்டையில் மூழ்கி தாய், மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.