மின்சாரம் தாக்கியதால் தாயார் இறந்த சோகத்தில் மகளுக்கு எளிமையாக நடந்த திருமணம்


மின்சாரம் தாக்கியதால் தாயார் இறந்த சோகத்தில் மகளுக்கு எளிமையாக நடந்த திருமணம்
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மகளின் திருமணத்திற்கு முந்தைய தினம் தாயார் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த சோகத்திற்கு இடையே மகளின் திருமணம் நிச்சயித்தபடி நேற்று நடந்தது.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

நாகர்கோவிலில் மகளின் திருமணத்திற்கு முந்தைய தினம் தாயார் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த சோகத்திற்கு இடையே மகளின் திருமணம் நிச்சயித்தபடி நேற்று நடந்தது.

மகளுக்கு திருமணம்

நாகர்கோவில் கீழப்பெருவிளை அய்யா கோவில் அருகே வசித்து வருபவர் சண்முகவேல். பி.எஸ்.என்.எல். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சாந்தி (வயது 51). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பொன் பிரதீஷா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், எள்ளுவிளையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் 27-ந் தேதி (நேற்று) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து சண்முகவேல் வீடு களை கட்டி இருந்தது. நேற்றுமுன்தினம் மதியம் திருமண வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் சாந்தி மும்முரமாக ஈடுபட்டார்.

மின்சாரம் தாக்கி தாய் சாவு

அப்போது கிரைண்டரில் மாவு அரைத்த போது எதிா்பாராத விதமாக கிரைண்டரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு சாந்தியை மின்சாரம் தாக்கியது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென சாந்தி இறந்த சம்பவம் அவருடைய உறவினர்களை மட்டுமின்றி ஊர் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

உடனடியாக பிரேத பரிசோதனை

எனினும் சோகத்தை மனதில் வைத்து புதைத்துக் கொண்டு பொன் பிரதீஷாவுக்கு நிச்சயிக்கப்பட்டபடி திருமணத்தை நடத்தி வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனை செய்வதற்கான அறிக்கை அனுப்ப நேரம் ஆகிக்கொண்டே சென்றது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாலை 4 மணிக்கு பிறகு வரும் உடல்களை பிரேத பரிசோதனை செய்யப்படுவது இல்லை. எனவே சாந்தி உடல் பிரேத பரிசோதனை மறுநாள் தான் நடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் சாந்தியின் உறவினர்கள் செய்வதறியாது திணறினர்.

இதைத் தொடர்ந்து சாந்தியின் உடல் பிரேத பரிசோதனையை விரைந்து முடித்து உடலை தருமாறு கலெக்டர் பி.என்.ஸ்ரீதரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்து உடனடியாக பிரேத பரிசோதனை செய்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி சாந்தி உடலை பிரேத பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் டாக்டர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். பின்னர் இரவு 9.30 மணிக்கு சாந்தி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலை புளியடியில் உள்ள மின் தகன மையத்தில் தகனம் செய்தனர்.

நிச்சயித்தபடி திருமணம் நடந்தது

இதை தொடர்ந்து பொன் பிரதீஷாவுக்கு நேற்று காலை நிச்சயிக்கப்பட்டபடி ஆசாரிபள்ளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் எளிமையாக நடந்தது. இருவீட்டாரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பொதுவாக திருமண நிகழ்ச்சி என்றாலே மணமகன் மற்றும் மணமகள் வீடு களை கட்டி இருக்கும். குடும்பத்தினர், உள்ளூர் சொந்தக்காரர்கள் மற்றும் தூரத்து சொந்தம் என அனைத்து உறவுகளும் கூடி விழா கோலம் பூண்டிருக்கும்.

ஆனால் சாந்தி இறந்து போனதால் யார் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை. சாந்தியை இழந்த சோகம் உறவினர்களை ஆட்கொண்டது. மேலும் திருமண நிகழ்ச்சிக்காக வீட்டுக்கு முன் போடப்பட்டு இருந்த பந்தலில் தான் சாந்தியின் உடல் இறுதி மரியாதைக்காக சுமார் 1.30 மணி நேரம் வைக்கப்பட்டு இருந்தது.


Next Story