சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை 64-வது கால்கோள் தினவிழா
சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை 64-வது கால்கோள் தினவிழா நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை 64-வது கால்கோள் தினவிழாவில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் டி.கே.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
கால்கோள் தினவிழா
தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையின் 64-வது கால்கோள் தினவிழா கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர்கள் பக்குல் ஜெயின், விவேக் ஜெயின், மூத்த ஆலோசகர் முடிட் ஜெயின், மூத்த தலைவர் அஸ்கிஸ் ஜெயின், தலைவர் சாத்விக் ஜெயின், முதன்மை நிர்வாக அதிகாரி அமிதாப் குப்தா, முதன்மை ஆப்பரேட்டிங் அதிகாரி சுதர்சன் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாக்குழு தலைவர் எஸ்.கேசவன் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் டி.கே.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
தொழில் வளமை
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து தொழிற்சாலையின் மூத்த செயல் உதவி தலைவர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், 1958-ம் ஆண்டு இப்பகுதியில் தொழில் வளமை இல்லாத நிலையில் ஜெயின் குடும்பத்தினர் ஒரு தொழிற்சாலை அமைத்து, ஆள் போல் வளர்ந்து உள்ளது. இன்றைக்கு ஐந்தாவது தலைமுறையினர் இந்த தொழிற்சாலையை நிர்வாகம் செய்கிற அளவுக்கு ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். 64 ஆண்டு காலங்களாக பல்வேறு காலகட்டங்களில் பணி சுமைகள், கொரோனா மற்றும் நிர்வாக பிரச்சினைகளை சந்தித்து இந்த தொழிற்சாலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று சொன்னால் அதற்கு இங்குள்ள பணியாளர்களும், தொழிலாளர்களின் ஒற்றுமை தான் காரணம், என்று கூறினார்.
புகைப்பட கண்காட்சி
விழா அரங்கத்தை நிர்வாக இயக்குனர் பக்குல் ஜெயின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அங்கு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நடனம், கலாசார நடனங்களும் நடைபெற்றன.
25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு தங்க நாணயங்களை தொழிற்சாலையின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அதிகாரிகள் வழங்கினர். விளையாட்டு குழு தலைவர் டி.ஜே.கதிர்வேல் விளையாட்டு குழு அறிக்கையை சமர்ப்பித்தார். தொழிற்சாலையின் உதவி தலைவர் சுரேஷ் மற்றும் தொழிற்சாலை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் நந்தினி சீனிவாசன், ஒப்பந்தக்காரர்கள் எஸ்.ஆர்.எஸ்.சுரேஷ்குமார், ஆர்.தங்கபாண்டியன், டி ராஜா, ஏ.கே.ஜெயராஜ், ஆர்.ராஜன், அனைத்து ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் எஸ். டி.தியாகராஜன், சா.பொன்ராஜ், இரா.தங்கமணி, சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி முதல்வர் அனுராதா, பள்ளி டிரஸ்டி ராமச்சந்திரன், அட்மினிஸ்டர் மதன், திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆவுடையப்பன், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் மற்றும் நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள், பழைய காயல் கிராம பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார், புன்னகாயல் ஊர் கமிட்டி தலைவர் அமல் சன் பிளீஸ், கடற்கரை கமிட்டி தலைவர் நாதன், ஓய்வு பெற்ற டி.சி.டபிள்யூ. பொது ஜன தொடர்பு அதிகாரி பால்ராஜையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு பரிசு
ஆறுமுகநேரி, காயல்பட்டணம், ஆத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சமீபத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு தேர்வுகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்த்து வரும் 136 ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
தொழிற்சாலையின் இதழை சிறப்பு விருந்தினர் டி.கே.ராமச்சந்திரன் வெளியிட பக்குல் ஜெயின் பெற்றுக்கொண்டார். ரத்த தானம் செய்தவர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெளியிடங்களில் சென்று சாதனை படைத்தவர்களுக்கும் பரிசு, பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.
முடிவில் விழா கமிட்டி துணைத்தலைவர் முருகேந்திரன் நன்றி கூறினார்.