தடையை மீறி கடலில் பாய்மர படகு போட்டி
கன்னியாகுமரி அருகே கோவளத்தில் தடையை மீறி கடலில் பாய்மர படகு போட்டி நடத்தப்பட்டதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே கோவளத்தில் தடையை மீறி கடலில் பாய்மர படகு போட்டி நடத்தப்பட்டதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.்
படகு போட்டி
நெல்லை மாவட்டம் இடிந்தகரை புனித லூர்து மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் கோவளத்தில் பாய்மர படகு போட்டி நடத்த ராதாபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டது.
இதற்கிடையே குமரி மாவட்ட கடற்பகுதியில் சூறைக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்ைக விடுத்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக பாய்மர படகு போட்டி நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.
தடையை மீறி நடந்தது
ஆனால் போலீசாரின் தடையை மீறி படகு போட்டியில் பங்கேற்பதற்காக இடிந்த கரையில் இருந்து நேற்று 15-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கோவளம் கடற்பகுதிக்கு வந்தனர். இதையடுத்து கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கோவளம் கடற்கரையில் குவிக்கப்பட்டனர். பின்னர் படகுகளில் வந்த மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மீனவர்கள் போட்டியை நடத்தியே தீருவோம் என்றனர்.
இதையடுத்து போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி கடலில் பாய்மர படகு போட்டி நடந்தது. இதில் 15 பாய்மர படகுகள் போட்டியில் கலந்து கொண்டன. இந்த படகு போட்டி கோவளத்தில் இருந்து தொடங்கி இடிந்தகரை வரை நடந்தது.