சாக்கடை கால்வாயான மழைநீர் ஓடைகள்
உடுமலை பகுதியில் உள்ள மழைநீர் ஓடைகள் சாக்கடைக் கால்வாய்களாக மாற்றப்பட்டு விட்ட நிலையில் முறையாக தூர் வாரப்படாததால் புதர் மண்டிக் கிடக்கிறது.
உபரி நீர்
உடுமலை பகுதியின் வழியாக கடக்கும் மழைநீர் ஓடைகளாக தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம் உள்ளிட்ட ஓடைகள் உள்ளன.
கடந்த காலங்களில் குளங்களின் உபரி நீர் மற்றும் மழைநீர் ஆகியவற்றை குளங்கள் மற்றும் அணைக்கு கொண்டு சேர்க்கும் நீராதாரமாக விளங்கிய இந்த ஓடைகளில் தொடர்ச்சியாக கழிவுகள் கலக்கப்பட்டதால் காலப்போக்கில் இந்த ஓடைகள் கழிவுநீர்க் கால்வாய்களாக மாறி விட்டன.
இந்த நிலையில் தற்போது கழுத்தறுத்தான் பள்ளம் ஓடையில் ஆகாயத்தாமரை மற்றும் நீர்தாவரங்கள் வளர்ந்து புதர் மண்டிய நிலையில் உள்ளது.
பாதாளச்சாக்கடை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
உடுமலை நகராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக ஓடைகளில் கலக்கப்படுகிறது. மேலும் பல இடங்களில் குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளைக்கொட்டி ஓடையை பாழாக்கி வருகிறார்கள். உடுமலை நகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன் படிப்படியாக மீண்டும் இந்த ஓடைகளை நன்னீர் ஓடைகளாக மாற்றும் வாய்ப்பு உருவாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பாதாளச் சாக்கடை திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வராததாலும், நீரோடைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததாலும் இவை சாக்கடைக் கால்வாய்களாகவே தொடர்கின்றன.
சாக்கடை கால்வாயான மழைநீர் ஓடைகள்
இந்தநிலையில் உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழா வளர்ச்சிப் பணிகள் சிறப்புத் திட்டத்தில் கழுத்தறுத்தான் பள்ளத்தில் ரூ.15 கோடியே 98 லட்சம் செலவில் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில் உள்ளது.
அத்துடன் முறையாக தூர்வாரப்படாமல் புதர் மண்டிக் கிடப்பதால் நீரோட்டம் தடைபடுகிறது. மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடுகள் ஏற்படுவதுடன், கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே கழுத்தறுத்தான் பள்ளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.