சாக்கை உய்யவந்தம்மன் கோவில் ஆனி தேரோட்டம்


சாக்கை உய்யவந்தம்மன் கோவில் ஆனி தேரோட்டம்
x

காரைக்குடி அருகே சாக்கை உய்யவந்தம்மன் கோவில் ஆனி திருவிழாவையொட்டி நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே சாக்கை உய்யவந்தம்மன் கோவில் ஆனி திருவிழாவையொட்டி நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆனித்திருவிழா

காரைக்குடி அருகே சாக்கோட்டையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சாக்கை உய்யவந்தம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடக்கவில்லை.

இந்த ஆண்டிற்கான இந்த விழா கடந்த மாதம் 26-ந்தேதி மாலை கொடியேற்றுதல் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

8-ம் திருநாளான நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புதுவயல் மேட்டுக்கடை பகுதியில் உள்ள கைலாசநாதர் விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், காவடி, அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தேரோட்டம்

9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரில் காலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளினார். அதை தொடர்ந்து பக்தர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். மேலும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி மாலை 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று தேரோட்டம் நடைபெற்றதால் சாக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story