சக்தி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா
தெற்கு மையிலாடி சக்தி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் பால்குடம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சக்தி மாரியம்மன்கோவில்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தெற்கு மையிலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
அன்று சுவாமி கரகம் பாலிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றுக்கு சென்ற தெற்கு மயிலாடியை சேர்ந்த பொதுமக்கள் அதில் புனித நீராடினர்.
சிறப்பு அபிஷேகம்
பின்னர் அங்கிருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்துக் கொண்டும், அக்னி சட்டி ஏந்தி கொண்டும், அலகு குத்திக் கொண்டும் புறப்பட்டு தெற்கு மையிலாடி சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இப்பகுதியை சுற்றியுள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமியை வழிபட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.