சாக்குலூத்துமெட்டு பாதையை விரைவில் அமைக்க வேண்டும்
சாக்குலூத்துமெட்டு பாதையை விரைவில் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
முல்லைப்பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் நிர்வாகிகள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் முரளிதரனை சந்தித்து அவர்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக முறையிட்டனர். பின்னர் நிருபர்களுக்கு விவசாயிகள் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், டி.சிந்தலைச்சேரியில் ஊருணியை ஆக்கிரமித்து பட்டா நிலமாக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 கிராம மக்கள் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், அந்த நிலத்தை மீண்டும் ஊருணியாக மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் இன்னும் செயல்படுத்தவில்லை. அதை செயல்படுத்த வேண்டும். தேவாரத்தில் இருந்து கேரள மாநிலம் செல்வதற்கு சாக்குலூத்து மெட்டுப் பாதையை விரைவில் அமைக்க வேண்டும். இந்த பாதை அமைக்கப்பட்டால், தேவாரத்தில் இருந்து 25 கிலோமீட்டரில் கட்டப்பனை செல்ல முடியும். தற்போது போடிமெட்டு வழியாக 130 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டியது உள்ளது. இந்த பாதையை அமைக்க வனத்துறையிடம் நிதி இல்லை என்றால் விவசாயிகளே சொந்த செலவில் அமைக்கிறோம் என்று கலெக்டரிடம் கூறினோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார் என்றனர்.