சத்தியமங்கலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


சத்தியமங்கலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x

சத்தியமங்கலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

சாலை மறியல்

சத்தி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டுவீராம்பாளையத்தில் 18 மற்றும் 22-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை சத்தி-பண்ணாரி ரோட்டில் காலிக்குடங்களுடன் ஒன்று திரண்டார்கள். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். மேலும் எங்கள் பகுதிக்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்யவேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தி நகராட்சி தலைவி ஆர்.ஜானகிராமசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சமாதானம் செய்ய முயன்றார்கள். ஆனாலும் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

60 ஆண்டுகளுக்கு முன்பு...

அதன்பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் லட்சுமணன், பழனிச்சாமி உள்பட சிலர் நகராட்சி தலைவர் ஜானகிராமசாமி அறைக்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள், எங்கள் பகுதியில் முறையாக தண்ணீர் வினியோகிப்பதில்லை என்று கூறினார்கள். அதற்கு தலைவர் ஜானகி ராமசாமி, 'கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டூர்பாளையத்தில் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. அதன்பின்னர் 40 ஆண்டுகளுக்கு முன்பு ரங்கசமுத்திரத்தில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. பிறகு மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடிநீர் வினியோகம் விஸ்தரிக்கப்படவில்லை. மேலும் நகரம் முழுவதும் குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளன. பல இடங்களில் வால்வுகள் சேதமடைந்து காணப்படுகிறது.

33 கோடி ரூபாய்

அதனால்தான் நகராட்சியில் சில இடங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. குடிநீர் பணிகளை மேம்படுத்த 33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் முடிய 10 மாதங்கள் ஆகும். அதுவரை ஒத்துழைப்பு கொடுங்கள். இப்போது உங்கள் பகுதியை நேரில் வந்து பார்த்து குடிநீர் பிரச்சினையை தீர்க்கிறேன்' என்றார். அதை ஏற்றுக்கொண்டு போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் நகராட்சி துணைத் தலைவர் ஆர்.நடராஜ், நகராட்சி ஆணையர் ரவி, சுகாதார அலுவலர் சக்திவேல், சத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.


Next Story