பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மோர்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோர்-ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தகவல்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மோர்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்தது. மொத்தம் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
எலச்சிபாளையம்:
மோர்பாளையம் சந்தை
திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் கால்நடை சந்தை நடந்து வருகிறது. இங்கு ஆடு, மாடு, எருமை, கோழி போன்றவை விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஒவ்வொரு வாரமும் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். பண்டிகை நாட்களில் சற்று கூடுதலாக வர்த்தகம் நடைபெறும்.
இந்தநிலையில் நேற்று மோர்பாளையம் சந்தை கூடியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் சந்தைக்கு ஆடு, மாடு, கோழிகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு, வியாபாரம் மும்முரமாக நடந்தது. குறிப்பாக வழக்கத்தை விட ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்தது. ஆடு, கோழிகளை வாங்க சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், முஸ்லிம்களும் அதிகளவில் குவிந்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சந்தைக்கு வழக்கத்தை விட கூடுதலாக ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அதில் நாட்டு வெள்ளாடு, ஜமுனா வெள்ளாடு, முணா வெள்ளாடு மற்றும் நாட்டு செம்மறி, துவரம் செம்மறி போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வந்தன. ஆடுகளை விட செம்மறி ஆடுகளே அதிகளவில் விற்பனையாகின.
அவை எடைக்கு ஏற்றார்போல் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. மொத்தம் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இதனால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.