தாலுகா அலுவலக வளாகத்தில் கஞ்சா விற்பனை2 பேர் கைது
தாலுகா அலுவலக வளாகத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில் மாநிலம் முழுவதும் ஆபரேசன் 2.0 என்ற பெயரில் கஞ்சா வேட்டை நடைபெற்று வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பெயரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு கஞ்சா கடத்தி வருபவர்களையும், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
2 பேர் கைது
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கோர்ட்டு கட்டிடத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் நேற்று காலை அந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து சிலர் தப்பி ஓட முயன்றனர். இதில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்த சந்தோஷ்ராஜ் (வயது 19), சண்முகம் (29) ஆகியோர் என்பதும், அவர்கள் அந்த பகுதியில் நின்று கொண்டு கஞ்சா விற்பனை ச9ெய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 150 கிராம் எடை உள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தாலுகா அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஈரோடு கிளைச்சிறை உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, 'ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் கஞ்சா விற்பனை பல நாட்களாக நடந்து வருகிறது. மேலும் அங்குள்ள பழைய கோர்ட்டு கட்டிடத்தில் கஞ்சா போதையில் சிலர் படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதேபோல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவுவாயில் அருகே உள்ள மறைவான இடத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடக்கிறது. எனவே கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.