இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை: 4 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம்
இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை செய்த 4 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வருவாய் துறையினர் மற்றும் டாஸ்மாக் மதுரை வடக்கு மாவட்ட மேலாளர் ஆகியோர் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கச்சிராயன்பட்டி கிராமத்தில் ஆய்வு செய்த போது அங்குள்ள டாஸ்மாக் கடையில் இரவு 10 மணிக்கு மூடாமல் தொடர்ந்து மது விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த கடையின் 2 மேற்பார்வையாளர்கள் செல்வம், கண்ணன் மற்றும் 2 விற்பனையாளர்கள் பால்ராஜ், பாண்டி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகளும் அரசு நிர்ணயித்த நேரத்தில் கடைகளை திறக்க வேண்டும் மற்றும் கடைகள் மூடப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் சங்கீதா எச்சரித்துள்ளார்.