தர்மபுரி ஏல அங்காடியில் ஆன்லைன் மூலம் பட்டுக்கூடுகள் விற்பனை அறிமுகம்


தர்மபுரி ஏல அங்காடியில்  ஆன்லைன் மூலம் பட்டுக்கூடுகள் விற்பனை அறிமுகம்
x

தர்மபுரி ஏல அங்காடியில் ஆன்லைன் மூலம் பட்டுக்கூடுகள் ஏல விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தர்மபுரி

தர்மபுரி ஏல அங்காடியில் ஆன்லைன் மூலம் பட்டுக்கூடுகள் ஏல விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பட்டுக்கூடு அங்காடி

தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித்துறை சார்பில் தர்மபுரி 4 ரோடு அருகில் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு அதிகாரிகள் தலைமையில் விவசாயிகள், வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் நடந்து வந்தது. இதனால் அங்கு கூச்சல் குழப்பம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது.

இந்தநிலையில் தமிழக அரசு உத்தரவுப்படி தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ஆன்லைன் மூலம் பட்டுக்கூடுகள் ஏல விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பட்டுக்கூடுகளை ஏலம் எடுக்கும் வியாபாரிகள் தரத்தை பார்வையிட்ட பின் செல்போன் மூலம் தாங்கள் கேட்கும் ஏலத்தொகையை பதிவிட வேண்டும். அதிகாரிகள் அலுவலக அறையில் உள்ள கம்ப்யூட்டர் மூலம் வியாபாரிகள் கேட்கும் ஏலத்தொகையை பதிவு செய்து தொகையை இறுதி செய்வர். இந்த புதிய நடைமுறை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

அதிகாரிகள் நிம்மதி

இந்த நிலையில் நேற்று தர்மபுரி ஏல அங்காடிக்கு 1,019 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இந்த பட்டுக்கூடுகள் ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெற்றது. ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.657-ம், குறைந்தபட்சமாக ரூ.369-ம், சராசரியாக ரூ.560.10-க்கும் பட்டுக்கூடுகள் விற்பனையானது. மொத்தம் ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 799-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை ஆனது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டுக்கூடுகள் ஆன்லைன் ஏல விற்பனையால் ஏல அங்காடியில் கூச்சல் குழப்பம் இன்றி அமைதியாக நடந்தது என்று விவசாயிகள், வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நடவடிக்கையால் அதிகாரிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story