குறைந்த விலையில் தக்காளி விற்பனை


குறைந்த விலையில் தக்காளி விற்பனை
x

நாமக்கல் உழவர்சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி இருப்பதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாமக்கல்

தக்காளி விலை உயர்வு

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. நாமக்கல் உழவர்சந்தையில் கிலோ ரூ.95 என விலை நிர்ணயம் செய்தாலும், வெளிமார்க்கெட்டில் கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே உழவர்சந்தையின் மூலம் சீரான விலையில் தக்காளி விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை விற்பனை மையம் மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் தக்காளியை குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்ய மாவட்ட கலெக்டர் உமா உத்தரவிட்டார்.

விற்பனை தொடக்கம்

அதன் எதிரொலியாக நாமக்கல் உழவர் சந்தையில் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை அலுவலர்கள் மூலம் விற்பனை மையம் அமைக்கப்பட்டு, தக்காளி விற்பனை நேற்று தொடங்கியது. இந்த மையத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு தலா 2 கிலோ மட்டுமே தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் வெளிச்சந்தைகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.110 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், உழவர் சந்தையில் ரூ.95-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முதல்நாளான நேற்று 95 கிலோ தக்காளி ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story