தேனி, போடியில் ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை


தேனி, போடியில் ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை
x
தினத்தந்தி 3 Aug 2023 2:30 AM IST (Updated: 3 Aug 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

தேனி, போடியில் உள்ள 5 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யும் பணி தொடங்கியது.

தேனி

தேனி, போடியில் உள்ள 5 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யும் பணி தொடங்கியது.

தக்காளி விற்பனை

'ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக தக்காளி மாறியுள்ளது. இந்தநிலையில் பொதுமக்களின் நலன் கருதி ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த 1 மாத காலமாகவே தக்காளி விலை உயர்ந்து வருகிறது. இதையொட்டி உழவர் சந்தையில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த வாரம் உழவர் சந்தைகளில் கிலோ ரூ.82-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் அங்கும் விலை உயர்ந்தது. நேற்று தேனி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.105-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், 500 ரேஷன் கடைகளில் கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக தேனி, போடியில் 5 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நேற்று தொடங்கியது.

5 ரேஷன் கடைகள்

தேனியில் வாரச்சந்தை எதிரே கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் உள்ள 2 ரேஷன் கடைகள், பழைய டி.வி.எஸ். சாலையில் உள்ள ரேஷன் கடை, போடியில் கடை எண் 5, 11 என மொத்தம் 5 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது.

இதற்காக மொத்த மார்க்கெட்டில் இருந்து கிலோ ரூ.95 வீதம் தக்காளி வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு அந்த தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கடைக்கு சுமார் 50 கிலோ வீதம் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஆனால் ரேஷன் கடைகளில் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே தக்காளி விற்றுத்தீர்ந்தது. மக்கள் ஆர்வத்துடன் தக்காளியை வாங்கிச்சென்றனர்.


Next Story