ஆனி மாத அமாவாசையையொட்டிஉழவர் சந்தைகளில் ரூ.90 லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை
சேலம்
ஆனி மாத அமாவாசையையொட்டி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ரூ.90 லட்சத்துக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையானது.
ஆனி அமாவாசை
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூர், இளம்பிள்ளை, எடப்பாடி, ஜலகண்டாபுரம், மேட்டூர், ஆட்டையாம்பட்டி, தம்மம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று ஆனி மாத அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் அதிகம் விற்பனை ஆனது. நுகர்வோர்களும் ஏராளமானவர்கள் வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
சூரமங்கலம் உழவர் சந்தைக்கு 195 விவசாயிகள் 36 டன் காய்கறிகளும், 18 டன் பழங்களும் கொண்டு வந்தனர். இதில் ரூ.19 லட்சத்துக்கு 8 ஆயிரத்து 705-க்கு விற்பனையானது. தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு 170 விவசாயிகள் 36 டன் காய்கறிகள், பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் ரு.13 லட்சத்து 38 ஆயிரத்து 855-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.89.97 லட்சத்துக்கு விற்பனை
இதேபோல் அஸ்தம்பட்டி உழவர் சந்தைக்கு 65 விவசாயிகள் 18 டன் காய்கறிகள், பழங்கள் கொண்டு வந்தனர். இதில் ரூ.7 லட்சத்து 19 ஆயிரத்து 260-க்கு விற்பனையானது. அம்மாபேட்டை உழவர் சந்தைக்கு 97 விவசாயிகள் 15 டன் காய்கறிகள், பழங்கள் கொண்டு வந்தனர். ரூ.55 லட்சத்து 9 ஆயிரத்து 985-க்கு விற்பனையானது.
இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறும் போது, 'அமாவாசையையொட்டி நேற்று உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் அதிகளவு விற்பனையானது. 11 உழவர் சந்தைகளுக்கும் மொத்தம் 983 விவசாயிகள் 234 டன் காய்கறிகள், பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதன் மூலம் ரூ.89 லட்சத்து 97 ஆயிரத்து 729-க்கு விற்பனை செய்யப்பட்டது. உழவர் சந்தைகளுக்கு 54 ஆயிரத்து 534 நுகர்வோர்கள் வந்து பொருட்களை வாங்கி சென்றனர்' என்றனர்.