களை கட்டிய கரும்பு, மஞ்சள் குலை விற்பனை


களை கட்டிய கரும்பு, மஞ்சள் குலை விற்பனை
x

தேனியில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, மஞ்சள் குலை விற்பனை களை கட்டியது.

தேனி

பொங்கல் பண்டிகை

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தைப்பொங்கல் பண்டிகை. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே தித்திக்கும் செங்கரும்பு, மஞ்சள் குலை போன்றவை தவிர்க்க முடியாதவை.

தேனி மாவட்டத்தில் பல இடங்களிலும் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, மஞ்சள் குலை மற்றும் வேப்பிலை, பிரண்டை, கூரைப்பூ, மாவிலை போன்றவை அடங்கிய காப்புக்கட்டு ஆகியவை விற்பனை செய்வதற்காக சாலையோரம் தற்காலிக கடைகள் முளைத்தன. அங்கு விற்பனை களை கட்டியது. இதேபோல் வாழை இலை, பழங்கள், பூஜைப்பொருட்கள், காய்கறிகள், விற்பனையும் களை கட்டியது.

அலைமோதிய கூட்டம்

தேனி நகரில் மதுரை சாலை, கம்பம் சாலை, பெரியகுளம் சாலை ஆகிய பிரதான சாலைகளில் தற்காலிக கடைகள் அமைத்து கரும்பு, மஞ்சள் குலை போன்றவை விற்பனை மும்முரமாக நடந்தது. தேனியில் நேற்று வாரச்சந்தை நாள் என்பதால், வாரச்சந்தையில் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தேனியில் ஒரு கரும்பு ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.100-க்கும், காப்புக்கட்டு ரூ.20 முதல் ரூ25-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் தேனி நகரில் குவிந்ததால் சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.


Next Story