ஆடித்திருவிழாவையொட்டி சேலம் அம்மாபேட்டையில் வண்டி வேடிக்கை கோலாகலம்
ஆடித்திருவிழாவையொட்டி சேலம் அம்மாபேட்டையில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
வண்டி வேடிக்கை
சேலம் மாநகரில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது.
இந்நிலையில், சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான வண்டி வேடிக்கை நேற்று இரவு கோலாகலமாக நடந்தது.
இதில், பல்வேறு கடவுள்களின் வேடம் அணிந்த பக்தர்கள், புராண கதைகளை தத்ரூபமாக சித்தரிக்கும் வகையில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் ஊர்வலமாக வந்தனர்.
சிவன் குடும்பம்
அம்மாபேட்டை சிவசக்தி நண்பர்கள் குழு சார்பில் சிவன், பார்வதி, முருகன், விநாயகர் போன்ற சாமிகளின் வேடம் அணிந்த பக்தர்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் அமர்ந்து வலம் வந்தனர்.
இதேபோல், மற்றொரு வண்டிகளில் குபேர லட்சுமி, சமயபுரம் மாரியம்மன், பாளையத்து அம்மன், கருமாரியம்மன், மாரியம்மன் மற்றும் வள்ளி-தெய்வானையுடன் முருகன், வீரபாகு வேடமணிந்து பக்தர்கள் வண்டிகளில் ஊர்வலமாக வந்தனர்.
இது பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. மேலும் ராமர், சீதா, லட்சுமணன், அனுமன் கோலத்தில் பக்தர்கள் வேடமணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
அனிமேஷன் அலங்காரம்
மேலும் ராம பக்தரான ஆஞ்சநேயருக்கு சிவபெருமான் ஆசி வழங்குவது போன்று வாகனத்தில் அனிமேஷனில் காட்சி இடம் பெற்றிருந்தது. அதேபோல், சிவன்-பார்வதி, முருகன், விநாயகர் போன்று சிவன் குடும்பம் பக்தர்களுக்கு காட்சி தருவது போல் மற்றொரு வாகனத்தில் அனிமேஷன் காட்சி மூலம் சாமி அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலம் வந்தது.
அப்போது ராமர், ஆஞ்சநேயர், சிவன் குடும்ப புராண கதைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. மொத்தம் 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் பக்தர்கள் பல்வேறு கடவுள்களின் வேடமணிந்து அம்மா பேட்டை மெயின்ரோடு, காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் வலம் வந்தனர். அப்போது பொதுமக்கள் தங்களது செல்போன்களில் வண்டி வேடிக்கையை படம் பிடித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டதால் கூட்டம் அலைமோதியது.
மேலும் செங்குந்தர் மாரியம்மன் கோவில் முன்பு சிலம்பம், பாறை கற்களை உடைத்தல் உள்ளிட்ட வீர சாகசங்களை இளைஞர்கள் செய்து காண்பித்தனர். அம்மாபேட்டையில் நடந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியையொட்டி அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.