சேலம் மத்திய சிறையில் சமையல்காரரை கஞ்சா கடத்தி வரக்கூறிய 2 கைதிகள் சிக்கினர்-பரபரப்பு தகவல்கள்


சேலம் மத்திய சிறையில் சமையல்காரரை கஞ்சா கடத்தி வரக்கூறிய 2 கைதிகள் சிக்கினர்-பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 6 Jun 2023 3:25 AM IST (Updated: 6 Jun 2023 9:43 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மத்திய சிறையில் சமையல்காரரை கஞ்சா கடத்தி வரக்கூறிய 2 கைதிகள் சிக்கினர். இதுகுறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சேலம்

மத்திய சிறை

சேலம் மத்திய சிறையில் சமீபகாலமாக தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு கைதிகளிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சில கைதிகள் இந்த பொருட்களை ஆசனவாயில் மறைத்து கடத்தி அதை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிறைக்கு பணிக்கு வந்த சமையலர் தனபாலை வார்டர்கள் சோதனை செய்தனர். அப்போது அவர் 140 கிராம் கஞ்சாவை உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வார்டர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தனபாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தனி அறையில் அடைப்பு

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

சிறையில் தண்டனை கைதி ஒருவரும், விசாரணை கைதி ஒருவரும் கூறியதன் பேரில் சமையலர் தனபால் கஞ்சா வாங்கி கடத்தி வந்துள்ளார். அந்த கைதிகள் கூறும் இடத்துக்கு சமையலர் அடிக்கடி சென்று கஞ்சாவை வாங்கி வந்துள்ளார். இதற்காக அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் பெற்றுள்ளார்.

இவ்வாறு 10-க்கும் மேற்பட்ட முறை சென்று கஞ்சா கடத்தி வந்து அவர்களிடம் கொடுத்து பணம் பெற்று உள்ளார். இந்த கஞ்சாவை அவர்கள் சக கைதிகள் சிலருக்கு அதிக விலைக்கு விற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கஞ்சா கடத்தி வரக்கூறிய கைதிகளிடம் சிறை வார்டர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரையும் தனி அறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

அதிரடி சோதனை

இந்த நிலையில் நேற்று மாலையில் துணை கமிஷனர் கவுதம் கோயல் தலைமையில் சுமார் 130 போலீசார் சிறைக்கு சென்று கைதிகள் அறையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதில் கைதி ஒருவரிடம் இருந்து கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. வேறு ஏதும் சிக்கவில்லை. இதேபோல் பெண்கள் கிளை சிறையில் 31 போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஒன்றும் சிக்கவில்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story