சேலம் மத்திய சிறையில் பொருட்களை சோதனை செய்ய 'ஸ்கேனர்' கருவி வசதி


சேலம் மத்திய சிறையில் பொருட்களை சோதனை செய்ய ஸ்கேனர் கருவி வசதி
x
தினத்தந்தி 9 Feb 2023 1:00 AM IST (Updated: 9 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 850-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடிக்கடி உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் போலீசார் மற்றும் வார்டர்கள் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது சில கைதிகளிடம் இருந்து தடை செய்யப்பட்ட செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுகிறது.

கைதியை பார்க்க வரும் உறவினர்கள் பிஸ்கட், பழம் போன்றவைகளை வாங்கி வருகின்றனர். அவற்றை சிறை வார்டர்கள் சோதனை செய்தாலும், அதை மீறி சிலர் ஏதாவது பொருள் ஒன்றில் மறைத்து வைத்து கைதியிடம் வழங்குவது அடிக்கடி நடைபெறுகிறது. இந்த நிலையில் பொருட்களை சோதனை செய்வதற்காக சிறையில் ரூ.19 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் பேக்கேஜ் ஸ்கேனர் என்ற கருவி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த புதிய வசதி குறித்து சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் கூறும் போது, 'வெளியில் இருந்து சிறைக்குள் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் செல்லாத வகையில் சோதனை செய்வதற்காக பேக்கேஜ் ஸ்கேனர் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பணிக்கு வரும் சிறை போலீசார் கொண்டு வரும் பொருட்களும், கைதிகளை பார்க்க வரும் உறவினர்களின் பொருட்களும் சோதனை செய்யப்படும்' என்றார்.


Next Story