வனக்காப்பாளரை மிரட்டி மரங்கள் கடத்தல்: 15 பேருக்கு தலா 2½ ஆண்டு சிறை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு


வனக்காப்பாளரை மிரட்டி மரங்கள் கடத்தல்: 15 பேருக்கு தலா 2½ ஆண்டு சிறை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x

வனக்காப்பாளரை தாக்கி மரத்தை வெட்டி கடத்திய 15 பேருக்கு தலா 2½ ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம்

மரங்கள் வெட்டி கடத்தல்

ஏற்காட்டில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி அப்போதைய சேலம் உதவி கலெக்டருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அதிகாரிகள் ஏற்காடு மலைப்பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில் 7 லாரிகளில் விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தி வந்துள்ளனர். இதையடுத்து லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் ஏற்காடு கொளபடிகாடு பகுதியை சேர்ந்த அய்யப்பன் சத்தியமூர்த்தி, பெரியபையன், சபரிவேல், குமார், செல்வராஜ், சித்தையன், சந்திரன், வேலு, ராமர், சக்தி, ரவீந்திரன், சந்திரசேகர், வெள்ளையன், வெங்கடாச்சலம், பாலசுப்பிரமணியன், வெங்கடேஷ், ஆறுமுகம் ஆகியோர் என்பது தெரியவந்தது.

சிறை தண்டனை

பின்னர் கடத்தி வந்த மரங்கள் மற்றும் அவர்களை ஏற்காடு அடிவார சோதனைச்சாவடியில் பணியில் இருந்த வனக்காப்பாளர் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் மறுநாள், அவர்கள், வனக்காப்பாளரை மிரட்டி சோதனைச்சாவடி கேட்டை உடைத்துக்கொண்டு மரத்துடன் லாரியை கடத்தி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 17 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இதில் பெரிய பையன், சித்தையன் ஆகிய 2 பேர் வழக்கு நடந்து கொண்டிருந்த போது இறந்து விட்டனர். இதனிடையே வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி மரங்கள் கடத்திய 15 பேருக்கு தலா 2 ஆண்டு 7 மாதம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கிறிஸ்டல்பபிதா தீர்ப்பு அளித்தார்.


Next Story