சிறுமியின் கருமுட்டை விற்பனை புகார்:சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு 'சீல்'
சிறுமியின் கருமுட்டை விற்பனை புகாரை அடுத்து சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறுமியின் தாய் உள்பட 4 பேர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 6-ந் தேதி சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி கருமுட்டை எடுத்ததில் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சமீபத்தில் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் இருந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், தனியார் ஆஸ்பத்திரியை விரைவில் மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனியார் ஆஸ்பத்திரியில் புதிதாக நோயாளிகள் யாரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை. மேலும், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து சேலம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் சிகிச்சை மையம், ஸ்கேன் சென்டர், ஆவணம் பாதுகாப்பு அறை உள்ளிட்ட 8 அறைகளை முழுமையாக மூடி சீல் வைத்தனர்.