சேலம் அரசு பெண்கள் பள்ளியில் விடைத்தாளுடன், முகப்புச்சீட்டு தைத்த மாணவிகள்-சமூக வலைதளத்தில் பரவிய வீடியோவால் பரபரப்பு
சேலத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் விடைத்தாளுடன், முகப்புச்சீட்டினை தைத்த மாணவிகளின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகப்புச்சீட்டு தைத்த மாணவிகள்
தமிழகம் முழுவதும் வருகிற 13-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கான விடைத்தாளுடன் புகைப்படம், பதிவு எண் ஆகியவை அடங்கிய முகப்புச்சீட்டு தைக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்தநிலையில் சேலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாளுடன், முகப்புச்சீட்டுகளை மாணவிகளே தைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிகாரிகள் விசாரணை
அந்த பள்ளியில் பணிச்சுமை காரணமாக ஆசிரியர்கள் யாரும் தைக்கும் பணிக்கு முன்வராத நிலையில், பிற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை அழைத்து வராமல், பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளையே, அவர்களுடைய முகப்புச்சீட்டை விடைத்தாளுடன் தைக்க வைத்ததாக கூறப்படுகிறது.
மாணவிகளை விடைத்தாளுடன், முகப்புச்சீட்டை தைக்க வைத்த அலட்சிய சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.