சேலத்தில் தொழிலாளி கொலை: தலைமறைவான 2 சிறுவர்களை பிடிக்க நடவடிக்கை
சேலத்தில் தொழிலாளி கொலை வழக்கில் தலைமறைவான 2 சிறுவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தொழிலாளி கொலை
சேலம் பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே தலை, முகம் உள்ளிட்ட உடலில் பல இடங்களில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கண்ணன் பிணமாக கிடந்த இடத்தில் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நேற்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் கண்ணன் பிணமாக கிடந்த இடத்தின் அருகில் 2 சிறுவர்கள் அடிக்கடி சென்று வருவது பதிவாகி இருந்தது. சிறுவர்கள் அடையாளம் தெரிந்து அவர்கள் வீட்டுக்கு சென்றனர். அப்போது 2 சிறுவர்களும் தலைமறைவானது தெரியவந்தது.
சிறுவர்கள் தலைமறைவு
இது குறித்து போலீசார் கூறும் போது, சம்பவம் நடந்த அன்று வேலைக்கு சென்று விட்டு பக்கத்து தெருவில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு கண்ணன் சென்று மனைவியை அழைத்து உள்ளார். அவர் மறுத்ததால் வீட்டிற்கு நடந்து சென்ற அவரிடம் பணம் பறிப்பதற்காக 2 சிறுவர்கள் அவரை பின் தொடர்ந்து உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
ேமலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான 2 சிறுவர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து சிறுவர்களை தேடி வருகிறோம். அவர்களை பிடித்து விசாரணை நடத்தினால் தான் கொலையாளி யார்? என்பது தெரிய வரும் என்று கூறினர்.