சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா: விண்ணுலக காட்சிகளுடன் வண்டிவேடிக்கை
சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் விழாவில் நடந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் விண்ணுலகில் நடந்த புராண கதைகளை கண்முன் சித்தரித்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
வண்டி வேடிக்கை
சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று இரவு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு கடவுள்களின் வேடம் அணிந்த பக்தர்கள், புராண கதைகளை தத்ரூபமாக சித்தரிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் அமர்ந்து ஊர்வலமாக வலம் வந்தனர். அதை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
குறிப்பாக செவ்வாய்பேட்டை வைஸ்ய நண்பர்கள் குழு சார்பில் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் திருப்பதி வெங்கடாஜலபதி, அலமேலு மங்கை தாயார், லட்சுமி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் போன்ற கடவுள் வேடமணிந்த பக்தர்கள் வண்டியில் ஊர்வலமாக வந்தனர்.
சிவன்- பார்வதி
இதேபோல் ஈசன் குரூப்ஸ் சார்பில் அப்பனுக்கு பாடம் சொன்ன சுவாமிமலை முருகன் வரலாற்றை பொதுமக்கள் நினைவு கூர்ந்து தெரிந்து கொள்ளும் வகையில் பக்தர்கள் சிவன், பார்வதி, முருகன், விநாயகர் வேடம் அணிந்து சாமிகளை போன்று தத்ரூபமாக நடித்தபடி வண்டியில் வலம் வந்தனர். இது பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது.
மேலும், வாணியர் சமூகம் வண்டி வேடிக்கை நண்பர்கள் குழு சார்பில் அம்மன் படத்தில் வரும் காட்சியை மிகவும் தத்ரூபமாக அலங்கரித்து வண்டியில் ஊர்வலமாக வந்தது. அதில், பக்தர் ஒருவர் காளியம்மன் வேடமணிந்து பொதுமக்களுக்கு காட்சி அளிப்பது போல் மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததை காணமுடிந்தது.
மீனாட்சி- சொக்கநாதர்
இதனை தொடர்ந்து சிவன்-பார்வதி குடும்பம், மதுரை மீனாட்சி, சொக்கநாதர் திருமணக்கோலத்தில் வேடமணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது போல் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் ஊர்வலமாக வந்தனர். அதாவது, இந்த வண்டி வேடிக்கையானது விண்ணுலகில் நடந்த புராண கதைகளை பக்தர்களின் கண்முன் சித்தரித்தது போல் காட்சி இருந்தது.
சேலம் இளைஞர் குழு சார்பில் மரம் வளர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்டியில் இளைஞர்கள் மரக்கிளைகளுடன் அமர்ந்து ஊர்வலமாக வந்ததை காணமுடிந்தது.
போலீஸ் பாதுகாப்பு
இந்த வண்டி வேடிக்கையை காண செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் செவ்வாய்பேட்டை பகுதியில் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. வண்டி வேடிக்கை நிகழ்ச்சி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் செவ்வாய்பேட்டையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முடிவில் சிறந்த வண்டிகளுக்கு விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.