7 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் சேலம் போலீஸ் சூப்பிரண்டு சாம்பியன்
7 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் சேலம் மாவட்ட சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார்.
துப்பாக்கி சுடும் போட்டி
சேலம் நரசோதிப்பட்டி பெருமாமலை அடிவாரம் பகுதியில் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று மேற்கு சரகத்திற்குட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, சேலம் சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா உள்பட 39 அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் இரண்டு பிரிவில் 6 சுற்றுகளாக இலக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
போலீஸ் சூப்பிரண்டு சாம்பியன்
இந்த போட்டியில் ஒட்டு மொத்தமாக அதிக புள்ளிகள் பெற்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார். இரண்டாம் இடத்தை நாமக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமியும், 3-ம் இடத்தை ஈரோடு உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயலும் பெற்றனர். இந்த போட்டியை சென்னை கமாண்டோ போலீஸ் துறையினர் நடத்தினர்.