திருப்புவனம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை விறுவிறுப்பு


திருப்புவனம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை விறுவிறுப்பு
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்புவனம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

சிவகங்கை

திருப்புவனம்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்புவனம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

வாரச்சந்தை

திருப்புவனத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வாரச்சந்தைகள் நடைபெறும். இதில் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி, காய்கறி, பழங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நடைபெறும். மறுநாள் புதன்கிழமை மாட்டுச்சந்தை மட்டும் நடைபெறும்.

இங்கு திருப்புவனத்தை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி, பழங்கள் மற்றும் பொருட்களை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் தீபாவளியை விமரிசையாக கொண்டாடுவார்கள். அதிகமான மக்கள் இறைச்சி எடுத்து சமைத்து சாப்பிடுவார்கள். இதற்காக ஆடுகளை சந்தையில் விலைக்கு வாங்குவார்கள். சிலர் ஒன்றாக சேர்ந்து சந்தையில் ஆடு வாங்கி கூறு போட்டு கறியை பிரித்துக் கொள்வார்கள்.

ரூ.1 கோடி

திருப்புவனம் வாரச்சந்தையில் தீபாவளியை முன்னிட்டு நேற்று அதிகமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சந்தைக்கு மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மதுரை, மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் இரவே வியாபாரிகள் அதிகமான ஆடுகளை கொண்டு வந்து கட்டியிருந்தனர். இதனால் மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் ஆடுகளை ஏற்றி வந்த மினி வேன்கள், ஆட்டோக்கள் அதிகமாக சாலையின் ஓரங்களில் நின்றன.

நேற்று அதிகாலையில் இருந்தே ஆட்டுச் சந்தை விற்பனை களை கட்டியது. மக்கள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். இதே போல் பல இடங்களில் கோழி, சேவல் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. நேற்று மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை நடைபெற்றதாக தெரிய வருகிறது.


Next Story