கடைவீதிகளில் வியாபாரம் களை கட்டியது
கடைவீதிகளில் வியாபாரம் களை கட்டியது
திருப்பூர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று திருப்பூரில் கடை வீதிகளில் வியாபாரம் களை கட்டியது. சொந்த ஊர் செல்ல ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் குவிந்தனர். ஜவுளி, பட்டாசு கடைகளில் விற்பனை சூடுபிடித்தது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) மகிழ்ச்சியுடன் கொண்டாட இருக்கிறார்கள். பனியன் தொழில் நகரான திருப்பூரில் தொழிலாளர்கள் பணியாற்றி விட்டு பண்டிகை காலங்களில் ஊர் திரும்புவது வழக்கம். இந்த ஆண்டு பனியன் தொழில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும் கூட, இருக்கின்ற தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா முடித்து அவர்கள் நேற்று முன்தினம் முதல் சொந்த ஊர் புறப்பட்டனர்.
திருப்பூரில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதுபோல் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுவரை 2½ லட்சம் தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து சொந்த ஊர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
களை கட்டிய வியாபாரம்
தீபாவளி பண்டிகைக்காக ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் வாங்குவதற்கு நேற்று கடைவீதிகள் களை கட்டியது. கடந்த 4 நாட்களாக எதிர்பார்த்த வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் கலக்கத்தில் காணப்பட்டனர். அவர்கள் பெரிதும் நம்பி இருந்தது ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய வியாபாரத்தைத்தான். அவர்கள் எதிர்பார்த்தபடியே நேற்று கடைவீதிகளில் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக்கடைகளில் குடும்பத்துடன் குவிந்தார்கள். விரும்பிய ஆடைகளை வாங்கி சென்றார்கள். இதுதவிர மாநகரின் பிரதான சாலையோரம் பனியன் கடைகள் வைத்திருந்தனர். அந்த கடைகளிலும் பெண்கள் கூட்டம், கூட்டமாக நின்று ஆடைகளை வாங்கி சென்றார்கள்.
ரோட்டோர வியாபாரிகளின் வசதிக்காக கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்துக்கு வசதி செய்யப்பட்டது. இருப்பினும் குமரன் ரோட்டில் வாகன போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. காலை முதல் இரவு வரை வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. திருப்பூர் கோர்ட்டு வீதி ரோடு இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடமாகவே மாறி போனது. அந்த ஒருவழிப்பாதையாக மாற்றி விட்டனர். குமரன் ரோட்டில் இருந்து கோர்ட்டு ரோடுக்கு இருசக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பட்டாசு, பலகார கடைகளில் கூட்டம்
பட்டாசு கடைகளில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒலி எழுப்பும் பட்டாசுகளை சிறுவர்கள் வாங்கி மகிழ்ந்தனர். இளைஞர்கள் இரவு நேரத்தில் வானில் பிரகாசமாக ஒளிரும் வெடிகளை விரும்பு வாங்கி சென்றார்கள். பட்டாசு கடைகளின் விற்பனை சிறப்பாக நடைபெற்றது.
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு பலகாரங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு பரிசாக கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறுவார்கள். இதற்காக இனிப்பு, கார வகைகளை விற்பனை செய்யும் கடைகளில் வியாபாரம் களை கட்டியது. கடந்த 3 நாட்களாக இருந்த மந்தநிலை மாறி வியாபாரம் சூடுபிடித்ததால் கடைக்காரர்கள் நிம்மதி அடைந்தனர்.
பேன்சி கடைகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் நிறைந்த புதுமார்க்கெட் வீதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காணப்பட்டன. இளைஞர்களும், இளம்பெண்களும் தாங்கள் விரும்பிய பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிகளில் குவிந்தனர். ரோட்டோர கடைகளின் விற்பனை சிறப்பாக நடைபெற்றது. சொந்த ஊருக்கு கிளம்பியவர்கள் ரோட்டோர கடைகளில் ஆடைகளை வாங்கி சென்றார்கள். காதர்பேட்டை பனியன் கடைகளில் வியாபாரம் நன்றாக இருந்தது. தீபாவளி பண்டிகை வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.