இளநீர், கம்பங்கூழ் விற்பனை மும்முரம்


இளநீர், கம்பங்கூழ் விற்பனை மும்முரம்
x

நெல்லை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இளநீர், கம்பங்கூழ் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இளநீர், கம்பங்கூழ் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

வெயில் தாக்கம்

நெல்லை மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இதனால் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் மள, மளவென்று குறைந்து வருகிறது.

நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது. நெல்லையில் நேற்று அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

வெயிலின் தாக்கத்தையொட்டி இளநீர், மோர், கம்பங்கூழ், சர்பத் ஆகியவற்றை வாங்கி பொதுமக்கள் அதிகளவில் குடித்து வருகிறார்கள்.

இளநீர்

செங்கோட்டை, சுரண்டை, கடையாலுருட்டி, வேலப்பநாடானூர், மணக்காடு, செட்டிகுளம் போன்ற பகுதிகளில் இருந்து இளநீர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு இளநீர் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையாகின்றன. சாத்தூர், கருங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வெள்ளரி பிஞ்சுகளை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். ரூ.20-க்கு 5 வெள்ளரி பிஞ்சுகள் வீதம் விற்பனை செய்யப்படுகிறது.

கோடைக்காலத்தையொட்டி தண்ணீர் ஊற்றி வைக்க மண்பானையில் பைப் வைத்து விற்கப்படும் பானை, சின்னபானை, டம்ளர், வாட்டர் கேன் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பைப் வைத்த பானைகள் 10 லிட்டர், 12 லிட்டர், 20 லிட்டர் என வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு ரூ.300 முதல் ரூ.700 வரையும், பைப் இல்லாமல் உள்ள மண்பானைகள் ரூ.250 முதல் ரூ.350 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story