வடகாடு பகுதியில் பலா மூசுகள் விற்பனை மும்முரம்


வடகாடு பகுதியில் பலா மூசுகள் விற்பனை மும்முரம்
x

வடகாடு பகுதியில் பலா மூசுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

பலா உற்பத்தி

வடகாடு, மாங்காடு, அனவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல், கொத்தமங்கலம், சேர்ந்தன்குடி, கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், பனங்குளம், மறமடக்கி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலா மரங்களை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். தற்போது இப்பகுதிகளில் உள்ள பலா மரங்களில் கூடுதலாக இருக்கும் இளங்காய்களை (மூசு) களைந்து அதனை அந்த பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளில் கொண்டு வந்து குவித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட பலா மூசுகள் வியாபாரிகள் மூலமாக, சிறிய மூசு ஒன்று ரூ.10-க்கும், சற்று பெரிய மூசு ஒன்று ரூ.20-க்கும் விற்பனை ஆகி வருகின்றன. இவைகள் உழவர் சந்தை மற்றும் வாரச்சந்தை போன்றவற்றிற்கு கொண்டு சென்று விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

ருசி மிகுந்த பலாப்பழம்

இப்பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் மிகுந்த ருசியாக இருப்பதால் உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் மும்பை, ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி வளைகுடா நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆண்டு தோறும் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் இப்பகுதிகளில் பலாப்பழம் விற்பனை தீவிரமடைந்து காணப்படும். நாள்தோறும் சீசன் சமயங்களில் சுமார் 25 டன் முதல் 50 டன் வரை பலாப்பழம் ஏற்றுமதி நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

பொருளாதார பின்னடைவு

இப்பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயம் சார்ந்த தொழில்களின் மூலமாக, முன்னேற்றம் காண முடியாத சூழ்நிலையே நீடித்து வருவதாகவும், அதனை ஈடு செய்ய அடுத்தடுத்த விவசாய பலன்களை செய்தும் ஒரு வித பலனும் கிடைப்பது இல்லை எனவும் குறை கூறி வருகின்றனர். இப்பகுதிகளில் பலா மரங்கள் அதிக அளவில் இருந்தும் தங்களது குடும்ப வறுமையின் காரணமாக, அவற்றை ஆண்டு கணக்கில் ஒத்தி மற்றும் குத்தகை முறைகளில் முன் பணம் பெற்று பலாப்பழ வியாபாரிகளிடம் கொடுத்து விடுகின்றனர்.

இதனால் ஆசைக்கு கூட பலாமரங்களில் பழுக்கும் பலாப்பழத்தை கூட சுவைக்க முடியாத சூழ்நிலையும் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு சில சமயங்களில் பலா விளைச்சல் அமோகமாக இருந்தும் கூட விலை வீழ்ச்சி காரணமாக பலாப்பழங்கள் மரத்திலேயே வீணாகி விடுவதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதிகளில் பலாப்பழ வீழ்ச்சியை தடுக்கும் பொருட்டு மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனவும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story