சீருடை, நோட்டு புத்தகங்கள் விற்பனை மும்முரம்


சீருடை, நோட்டு புத்தகங்கள் விற்பனை மும்முரம்
x

நாளை மறுநாள் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளதால் சீருடை, நோட்டு புத்தகங்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.

ஈரோடு

நாளை மறுநாள் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளதால் சீருடை, நோட்டு புத்தகங்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.

பள்ளிகள் திறப்பு

தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்த பிறகு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கூடங்கள் நாளை மறுநாள் (புதன்கிழமை) திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு 2 நாட்களே இருப்பதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பெற்றோர் தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை கடைவீதிக்கு அழைத்து சென்று சீருடை, நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களை வாங்கினர். இதேபோல் ஈரோட்டில் உள்ள கடைவீதியிலும் பொதுமக்கள் பலர் குவிந்தனர்.

புத்தகப்பை

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட சீருடைகளை மக்கள் ஆர்வமாக வாங்கினர். மேலும், புதிய புத்தகப்பைகளை வாங்குவதற்காகவும் மக்கள் குவிந்தனர். மாணவ- மாணவிகளின் விருப்பத்துக்கு ஏற்ப புத்தகப்பைகளை பெற்றோர் வாங்கி கொடுத்தனர். இதேபோல் ஸ்டேசனரி பொருட்களின் விற்பனையும் தீவிரமாக நடந்தது. புதிய பேனா, பென்சில், அந்த பொருட்களை வைக்கும் டப்பா போன்றவற்றை மாணவ- மாணவிகளே தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவ- மாணவிகள் தயாராக இருக்கும் வகையில், தனியார் பள்ளிக்கூடங்களில் எந்தெந்த நோட்டு புத்தகங்களை வாங்க வேண்டும் என்று பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் நோட்டு புத்தகங்களின் விற்பனையும் மும்முரமாக நடந்தது.


Related Tags :
Next Story