காதலர் தின பரிசு பொருட்கள் விற்பனை மும்முரம்
நெல்லையில் காதலர் தின பரிசு பொருட்கள் விற்பனை மும்முரம் இருந்தது.
காதலர் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கு ஒருவர் பரிசு பொருட்களை வழங்கி மகிழ்வார்கள். ரோஜா பூக்கள், பூங்கொத்து, சாக்லெட், அழகிய பொம்மை, கீச்செயின் போன்றவற்றையும் வழங்கி தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள். இதனால் நெல்லையில் நேற்று காதலர் தின பரிசு பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. காதலின் சின்னமாக கருதப்படும் ரோஜா பூக்களின் விலையும் கடந்த சில நாட்களாக உயர்ந்தே காணப்படுகிறது. நெல்லையில் தாஜ்மஹால் ரோஜா பூக்கள் ஒரு கிலோ ரூ.400 ஆகவும், சாதாரண ரோஜா பூக்கள் ரூ.200 ஆகவும் விற்பனையானது.
மானூர் சுற்றுவட்டார பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட ரோஜா பூக்கள் கடந்த சில நாட்களாக அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது. அவற்றின் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. மேலும் பூங்கொத்து தயாரிக்கவும் ஏராளமானவர்கள் ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். இதனால் அவற்றை தயாரிக்கும் பணிகளும் இரவு பகலாக நடைபெற்றது. காதலர்கள் அதிகம் கூடும் இடங்களான நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் பூங்காக்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.