திடீரென பெய்யும் மழையால் விற்பனை மந்தம்


திடீரென பெய்யும் மழையால் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் திடீரென பெய்யும் மழையால் விற்பனை மந்தமாகியுள்ளது. இதனால் நடைபாதை வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

நீலகிரி

கூடலூரில் திடீரென பெய்யும் மழையால் விற்பனை மந்தமாகியுள்ளது. இதனால் நடைபாதை வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

திடீர் மழை

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். இதில் தென்மேற்கு பருவமழை அதிகளவிலும், வடகிழக்கு பருவமழை சற்று குறைந்தளவிலும் பெய்யும். இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்ததால் பச்சை தேயிலை விளைச்சல் அடியோடு பாதித்தது. மேலும் நியாயமான கொள்முதல் விலையும் கிடைக்கவில்லை. இதனால் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் தாக்கம் அனைத்து தரப்பு வணிகர்களையும் பாதித்துள்ளது.

ஏமாற்றம்

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சமவெளி பிரதேச பகுதிகளில் வியாபாரம் களை கட்டி உள்ளது. ஆனால் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் சிறு விவசாயிகள் பொருளாதார ரீதியாக முடங்கியுள்ளனர்.

இதற்கிடையில் கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காலை நேரத்தில் லேசான வெயில் தென்படுகிறது. பின்னர் திடீரென மழை பெய்கிறது. இதனால் பண்டிகை கால வியாபாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தொடர் மழையால் 'கடை விரித்தேன், கொள்வார் இல்லை' என்ற கதைதான் நீடித்து வருகிறது. நேற்று மழை இல்லாததால் பரவலாக விற்பனை நடைபெற்றது. இருப்பினும் எதிர்பார்த்த வியாபாரம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து நடைபாதை வியாபாரி ராஜகுமார் கூறியதாவது:-

பச்சை தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதுபோல வியாபாரம் இப்போது இல்லை. பச்சை தேயிலைக்கு விலை இல்லை உள்ளிட்ட காரணங்களால் வருமானமின்றி பணப்புழக்கம் குறைந்து விட்டது. மேலும் திடீரென பெய்யும் மழையால் வியாபாரம் மந்த கதியில் உள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு

கூடலூரை சேர்ந்த புட்ராஜ்:-

பல்வேறு சிரமங்களுக்கிடையே நடைபாதைகளில் வியாபாரம் செய்து வருகிறோம். கூடலூரில் தொடர்ந்து மழை பெய்யும்போது வியாபாரம் முழுமையாக நடைபெறுவதில்லை. அதை ஈடு செய்யும் வகையில் பண்டிகை காலங்களில் நன்கு வியாபாரம் இருக்கும். நாளுக்கு நாள் கூடலூர் பகுதியில் ஒவ்வொரு பிரச்சினைகள் ஏற்படுவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் நடைபாதை வியாபாரிகளையும் பாதித்துள்ளது. வசதி படைத்தவர்கள் பெரிய கடைகளுக்கு சென்று விடுகின்றனர். சாதாரண ஏழை, எளிய மக்கள் நடைபாதை கடைகளை நாடி வருகின்றனர். கொரோனா காலத்துக்கு பிறகு இயல்புநிலை திரும்பினாலும் கூடலூர் பகுதியில் வியாபாரம் மிகவும் நலிவடைந்து விட்டது. தோட்ட தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெற்றால் மட்டுமே நகர பகுதி வளர்ச்சி பெறும்.

மரப்பாலத்தை சேர்ந்த பாண்டியன்:-

கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்கிறது. இதனால் நடைபாதை கடைகளில் வியாபாரம் மிகவும் பாதித்துள்ளது. மேலும் பழங்கள் விற்பனை இல்லாததால் தினமும் சில கிலோ பழங்கள் வீணாகி வருகிறது. இதன் காரணமாக வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

வெளிமாநில வியாபாரிகளால் பாதிப்பு

கூடலூர் நடைபாதை வியாபாரிகள் சங்க தலைவர் ஜபருல்லா:-

கூடலூர் மக்களை எதிர்பார்த்து நடைபாதை வியாபாரிகள் உள்ளனர். பண்டிகை காலங்களில் வியாபாரம் நன்கு நடக்கும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென மழை பெய்து விடுகிறது. இதனால் மக்கள் வரத்து இல்லாமல் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. காலநிலை நன்கு உள்ள சமயத்தில் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து சிறு வியாபாரிகள் கூடலூர் நகர சாலையோரம் கடைகள் அமைத்து விடுகின்றனர்.

இதனால் காலநிலை ஒருபுறம் இருந்தாலும். வெளிமாநில வியாபாரிகளால் வியாபாரம் பாதிப்பு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கூடலூர் நகரில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் தேயிலை உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் உள்ளது. இதனால் நடைதை வியாபாரிகள் தொடங்கி அனைத்து தரப்பு வணிகமும் பாதித்துள்ளது.


Next Story