உப்பளங்களில் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கியது
தூத்துக்குடி, வேம்பார், முள்ளக்காடு உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து உப்பளங்களிலும் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கியது. தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
தூத்துக்குடி, வேம்பார், முள்ளக்காடு உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து உப்பளங்களிலும் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கியது. தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
உப்பு உற்பத்தி
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்து உள்ளன. இதில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் முழுவீச்சில் உப்பு உற்பத்தி நடைபெற்றது. இதில் சுமார் 15 லட்சம் டன் உப்பு உற்பத்தியானது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு உப்பு உற்பத்தி சீசன் முடிவடைந்தது.
தொடங்கியது
வழக்கமாக ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் மீண்டும் தொடங்கும். அதன்படி உப்பள தொழிலாளர்கள் மீண்டும் உப்பு உற்பத்தியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர். இதனால் பெரும்பாலான உப்பளங்களில் ஜிப்சம் எடுக்கும் பணி நடந்தது. அதன்பிறகு பாத்திகள் தயார் செய்யப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டன. தற்போது சில உப்பளங்களில் இருந்து உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வாரப்பட்டு வருகிறது. உப்பு உற்பத்தி தொடங்கி இருப்பதால் உப்பள தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி வருகின்றனர்.